
19.உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
பொருள்: உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும்போது சொல்லும் பழமொழி இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும் என்று உன் னிடம் கேட்கும் உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய் இருக்க வேண்டும். எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங் களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித் தால் எங்களுக்கென்ன?
விளக்கம்: அக்காலத்தில், பெண்கள் எத்தகைய மணவாளன் தங்களுக்கு அமைய வேண்டும் என்று கேட்கும் உரிமை இருந்திருக்கிறது. அதனால் தான் ஒரு பக்தன் தங்களுக்கு கணவனாக வேண்டும் என்றார்கள். அது மட்டுமல்ல! நல்ல கணவன் அமைந்து விட்டால், கிரகங்களின் மாற்றம் கூட ஏதும் செய்யாது என்று உறுதியாகச் சொல் கிறார்கள். இறைவனை உறுதியாக நம்புவோருக்கு கிரகங்களின் தாக்கம் இல்லை என்பது இப்பாடல் உணர்த்தும் உட்கருத்து.
20. போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
பொருள்: சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.
விளக்கம்: திருவெம்பாவையின் கடைசிப்பாடல் இது. இறைவனை வணங்கினால் போதுமா? மனம் ஓரிடத்திலும், கைகள் மட்டும் வணங்கிய நிலையில் இருப்பதால் என்ன லாபம்? மாணிக்கவாசகர் தன் பார்வையை இறைவனின் முகத்தின் மீது செலுத்தினாரா? அவரது திருவடியை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார். அவனது பாத தரிசனம் கிடைத்தால் போதும்! வாழும் போதும் இன்பம்! மறைவுக்குப் பிறகும் இன்பம் என்கிறார்.நாளை முதல் திருப்பள்ளியெழுச்சி பாடுவார் மாணிக்கவாசகர்.
